சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காஸாவிற்கு மின்சாரம், எரிபொருள் அல்லது மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களினால் காசாவில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,350 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் சுரங்க பாதுகாப்பு வலையமைப்பை இலக்குவைத்து தொடர் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான விமானத் தாக்குதல்களை காசா மீது மேற்கொண்டுவருகின்றது.
இந்த தாக்குதல்களில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன், 5 ஆயிரத்து 600 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் 3 இலட்சத்து 39 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகள் இன்றி மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
பலஸ்தீன மக்கள் மீதான கண்மூடித்தனமான மற்றும் கடுமையான தாக்குதல்கள் யுத்தக் குற்றமாக கருதப்படலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் தலைவர் கெனத் ரோத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இஸ்ரேலில் 1300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக உந்துகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
எனினும் காசா மற்றும் லெபனானில் இருந்து தமது நாட்டின் மீது நேற்றிரவு முழுவதும் எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஹமாஸ் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் அல்லது மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.