Home Srilanka இலங்கையில் முப்பது ஆண்டுகாலப் போரில் சுமார் 29,000 பேரே உயிரிழந்தனர் – ஆனால் கடந்த 10...

இலங்கையில் முப்பது ஆண்டுகாலப் போரில் சுமார் 29,000 பேரே உயிரிழந்தனர் – ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 27,000 பேர் உயிரிழப்பு.

0

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கத்திலுமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர,

“ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நாட்டு மக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும். மேலும், முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமாகின்றது.

பௌதீகப் பாதுகாப்பு மாத்திரமன்றி பொருளாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு ஆகியவையும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 27,000 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். முப்பது ஆண்டுகாலப் போரில் சுமார் 29,000 பேரே இறந்தனர். தற்போது, நாட்டில் வீதி விபத்துகள் அதிகமாக இடம்பெறுகின்றன.

அதேபோன்று, போதைப்பொருளும் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கிறது. வலுசக்தி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவையும் தேசிய பாதுகாப்பின் கீழ் அடங்குகின்றன.

எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதம், அடிப்படைவாதம், போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நாம் துறைசார் மேற்பார்வைக் குழுவாக, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு உயரிய பங்களிப்பை வழங்குவதற்காக நாங்கள் செயற்பட்டு வருகிறோம். பிரிவினைவாத அடிப்படையிலான பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் என்பவற்றை பௌதீக ரீதியான அச்சுறுத்தல்கள் என்று அழைக்கலாம்.

அதேபோன்று, ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை அமர்வுகளிலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக பல்வேறு வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

சர்வதேசமல்லாத ஒரு ஆயுதப் போராட்டமே இலங்கையில் இடம்பெற்றது. எனவே, நாட்டில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்கும் வகையில், எமது மேற்பார்வைக் குழுவின் பங்களிப்புடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

‍ஜெனீவா மனித உரிமைக் குழுவுக்கு இப்போதேனும் நாம் உண்மை நிலையைப் புரிய வைக்க வேண்டும். இதனால், தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் உண்மை நிலை அதில் விளக்கப்பட்டுள்ளது.”என்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version