Home Srilanka தமிழர்களின் பூர்வீகத் தண்ணிமுறிப்புக் கிராமம் மீள்குடியேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்.

தமிழர்களின் பூர்வீகத் தண்ணிமுறிப்புக் கிராமம் மீள்குடியேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்.

0

தமிழர்களின் பூர்வீகக் கிராமமான தண்ணிமுறிப்பில், எமது தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தும்வரை நாம் தொடர்ந்து மக்களோடு இணைந்து போராடுவோமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புபகுதியில், தொல்லியல் மற்றும், வனவளத் திணைக்களத்தால் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளநிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்கு அரசஅதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து குறித்தபகுதிக்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த களவிஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தண்ணிமுறிப்புப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு, தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தற்போது 2023ஆம் ஆண்டு ஆகிவிட்டபோதும் அந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கானமுயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் தமது காணிகளைத் தாமே துப்பரவு செய்து, விவசாய நடடிக்கைகளையும் மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டபோது, தொல்லியல் திணைக்களத்தாலும், வனவளத்திணைக்களத்தாலும் அதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறிருக்க தமது பூர்வீக விவசாயமற்றும், குடியிருப்புக் காணிகளை மீட்க இந்தமக்களும், இந்த மக்களோடு, மக்கள் பிரதிநிதிகளான நாமும் தொடர்ந்து போராடிவருகிறோம்.

அந்தவகையில் இம்மாதம் 16ஆம்திகதி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் இந்த காணி விடுவிப்பு தொடர்பாகவே பேசப்பட்டது. அதற்கமைய நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலவரங்களைப் பார்வையிடுவதென முடிவு செய்யப்பட்டது.

அதற்கமைய தண்ணிமுறிப்பு பகுதிக்கு வருகைதந்து இந்த ஆக்கிரமிப்பிற்குள்ளான தமிழ் மக்களின் காணிவிடயம் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டு சிலமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படயில் சில பகுதிகள் விடுவிப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளை தற்போது விடுவிப்பதற்கு முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே விடுவிக்கப்பட முடியாத காணிகள் தொடர்பில் மாவட்டசெயலர் உரிய தரப்பினருக்கு எழுத்துமூலமாக அறிக்கை சமர்ப்பித்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில் இந்த காணிவிடுவிப்புத் தொடர்பிலான எமதுமக்களதும், மக்கள் பிரதிநிதிகளான எமது தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த ஒரு முன்னேற்றமாகப் பார்க்கின்றோம்.

இந்த மக்களின் காணிகள் அவர்களுக்குக் கிடைக்கும்வரை நாம் தொடர்ச்சியாக மக்களோடு துணை நிற்போம் – என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version