தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீடு முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
“நாட்டைப் பிரிக்க முயலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தே நாம் அணிதிரண்டுள்ளோம்” – என்று போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு எதிராக இன, மதவாதக் கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
கஜேந்திரகுமாரின் வீட்டைச் சூழ இன்றும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். விமானப் படையினரும் வந்திருந்தனர். நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.
பேரணியாக வந்தவர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், கஜேந்திரகுமாரின் வீட்டுக்கு அருகில் செல்வதற்குப் பொலிஸார் இடமளிக்கவில்லை. நீதிமன்றத் தடை உத்தரவையும் பொலிஸார் பெற்றிருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் அங்கு நின்ற பின்னர் கம்மன்பில அணியினர் கலைந்து சென்றனர்.
நேற்றும் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடைபெற்றது. ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரதத்ன தேரர் தலைமையிலான மூவர் கொண்ட குழு போராட்டத்தில் ஈடுபட்டது. ஆனால், கம்மன்பில தலைமையிலான இன்றைய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.