Home World Saudi Arabia சவூதியில் சாதித்த ரொனால்டோ…

சவூதியில் சாதித்த ரொனால்டோ…

0

சவூதி உதைபந்தாட்ட கழகமான அல் நஸர் கோடிக்கணக்கில் வாங்கிய போரத்துக்கல் வீரர் ரொனால்டோவின் அசத்தலான கோல் மூலம் அந்த அணி கிண்ணத்தை கைப்பற்றி வாகை சூடியது.

இதன்படி அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பஹத் சர்வதேச மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணி(Al Nassr), அல் ஹிலால்(Al Hilal) அணி இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் ஆரம்பித்த முதலே விளையாட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரு அணிவீரர்களும் கடுமையாக முயன்றும் கோல் அடிக்க முடியாததால் முதல் பாதி ஆட்டம் கோல்கள் எதுவும் பெறப்படாமல் நிறைவுக்கு வந்தது.

எனினும் இடைவேளைக்கு பின்னரான ஆட்டம் சூடு பிடித்தது. இரு அணிவீரர்களும் கோல் போடுவதில் குறியாக இருந்தனர். இந்நிலையில் அல் ஹிலால் அணி வீரர் மைக்கேல், போட்டியின் முதல் கோலை 51 வது நிமிடத்தில் மிகவும் லாவகமாக அடித்து பார்வையாளர்களை விரல் நுனிக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து பதிலடிக்கு அல் நஸர் அணி கடுமையாக போராடியது. எனினும் இந்த போராட்டத்திற்கு தக்க பலன் கிடைத்தது. இறுதியில் ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் அல் நஸர் அணித் தலைவர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமான ரொனால்டோ கோல் ஒன்றை அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் மீண்டும் பரபரப்பான ஆட்டத்தில் இறுதி நேரம் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.எனவே கூடுதல் நேரமாக 30 நிமிடம் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டத்தின் 98ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்து அல் நஸர் அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

ரொனால்டோ அடித்த கோலுக்கு பதிலடி கொடுக்க இறுதிவரை முயன்றும் அல் ஹிலால் அணியால் முடியவே இல்லை. இதனால் 2023 ஆம் ஆண்டுக்கான அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை அல் நஸர் அணி தட்டிச் சென்றுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் கிளப் அணியில் சேர்ந்த பின்னர் அந்த அணி வெல்லும் முதல் கிண்ணம் இதுவாகும். அத்துடன் அல் ஹிலால் அணியை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு அல் நஸர் அணி முதல் முறையாக வீழ்த்தி இருப்பதுடன், அரபு கிளப் சாம்பியன்ஷிப் கிண்ணத்தையும் அல் நஸர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version