மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், அண்ணாமலை பா.ஜ.க. மாநிலத் தலைவர் மட்டும் தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் மட்டுமே முக்கியம். டெல்லியில் நடந்த கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மோடி அருகில் அமர வைத்தார்.
மோடிக்கு தெரிந்த எடப்பாடியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கூறினார். செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பா.ஜ.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிலும், கடனிலும் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. 30 சதவீதம் கமிஷன் கேட்பதால் எந்த ஒரு தொழிற்சாலையும் தமிழகத்திற்கு வருவதில்லை.
பிரதமர் மோடி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகில் பொருளாதார வளர்ச்சியில் 5-வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களுக்கும் மோடி எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிருபர்கள் செல்லூர்ராஜூ பேட்டி குறித்து அண்ணாமலையிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது.
மேலும்,நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. மக்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்களே எங்களுக்கு எஜமானர்கள். மெஜாரிட்டி, மைனாரிட்டி பாலிடிக்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மைனாரட்டி மெஜாரிட்டி என்பது ஒரு புரிதலுக்காக கொண்டு வரப்பட்டது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டி என்ற வார்த்தைகளுக்கு மட்டும்தான் சிறப்பு சலுகைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.