Home World உக்ரைன் கைதிகளை கொடுமைப்படுத்தி பாலியல் சித்ரவதை, ரஷியா மீது குற்றச்சாட்டு.

உக்ரைன் கைதிகளை கொடுமைப்படுத்தி பாலியல் சித்ரவதை, ரஷியா மீது குற்றச்சாட்டு.

0

கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.

இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. போர் 525-ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷியா மீது புதிய குற்றச்சாட்டை உக்ரைன் வைத்துள்ளது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்ஸன் பகுதி உக்ரைன் நாட்டால் மீட்கப்பட்டது.

இங்கு ரஷியாவால் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளிடம் உக்ரைன் விசாரணை நடத்தியது. உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து மனித உரிமை சட்டங்களுக்கான குளோபல் ரைட்ஸ் கம்ப்ளையன்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் மொபைல் ஜஸ்டிஸ் டீம் குழுவினர் செயலாற்றினர்.

இதில் கைதிகளை ரஷியா உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கியதாக இந்த குழு கண்டுபிடித்துள்ளது. சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்து ரஷியாவை சேர்ந்த 220 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவர்களை பல்வேறு விதமாக ரஷியர்கள் சித்ரவதை செய்துள்ளனர். கைதிகளை அடிப்பது, அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, அவர்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது மற்றும் ஒரு கைதி பாலியல் கொடுமை செய்யப்படுவதை பிற கைதிகளை பார்க்க வைப்பது போன்ற துன்புறுத்தல்களை கையாண்டனர்.

மேலும் கைதிகளின் முகத்தை மெல்லிய துணியால் மூடி மூச்சு திணறும் அளவிற்கு அதிவேகமாக நீரை பாய்ச்சும் “வாட்டர் போர்டிங்” எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர். இக்குற்றச்சாட்டுகளில் பெரும் குற்றம் புரிந்தவர்கள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திலுள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.

இந்த நீதிமன்றம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக ஏற்கனவே கைது உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவால் கைது செய்யப்பட்டவர்களில் உக்ரைன் ராணுவத்தை சேர்ந்தவர்களை தவிர தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கல்வி பணியில் உள்ளவர்களும் அடங்குவர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ரஷியா மறுத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version