Home Srilanka Politics முல்லைத்தீவில் அமைச்சரவைத் தீர்மானத்தையும் மீறி சிங்களவர்களுக்குக் காணிகள் பகிர்வு!

முல்லைத்தீவில் அமைச்சரவைத் தீர்மானத்தையும் மீறி சிங்களவர்களுக்குக் காணிகள் பகிர்வு!

0

மகாவலி ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கையேற்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதனையும் மீறி கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகவிருந்த ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மகாவலி ‘எல்’ வலயத்தினுள் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 6 கிராம அலுவலர் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றைப் பிரதேச செயலகத்திடமிருந்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்த முயற்சி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. அமைச்சரவையிலும் மேற்படி நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் 30 ஏக்கர் வீதம் சுமார் ஆயிரத்து 500  ஏக்கர்  காணிகள் மகாவலி அதிகார சபையால் சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் 1984ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவையாக இருந்துள்ளன.  

இந்தக் காணிகளில் உள்ள பற்றைகளை கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிங்களவர்கள் துப்புரவு செய்ய முற்பட்டபோதே காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தெரியவந்துள்ளன.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் மேலதிக செயலர் தலைமையில் இடம்பெற்ற’ சூம்’ கலந்துரையாடலில் மகாவலி அதிகாரசபையின் நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அதிகார சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கை இடம்பெறவில்லை என்று மறுத்துள்ளனர்.

எதிர்வரும் 3ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version