ஸ்ரீலங்கா கராத்தே சம்மேனளத்தின் வட மாகாணத்திற்கான கராத்தே போட்டிகளில் மன்னார் மாவட்டத்தில் 38 மாணவர்கள் கலந்து கொண்டதில் 36 மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 92 பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் சனி , ஞாயிறு (22-23.07.2023) ஆகிய இரு தினங்கள் கிளிநொச்சி பொது விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஐந்து மாவட்டங்கள் கலந்து கொண்டன.
இதில் மன்னார் மாவட்டத்தில் சர்வதேச சக்கூறா சோட்டக்கான் கராத்தே மன்னார் கிளை அமைப்பும் கலந்து கொண்டது.
இவ் அமைப்பின் ஊடாக மன்னார் மற்றும் மடு வலய பாடசாலைகளின் ஒன்பது பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டனர்.
இதில் விடத்தல்தீவு யோசவ் வாஸ் ம.வி. , இலுப்பைக்கடவை அ.த.க.பாடசாலை , ஈச்சளவத்தை அ.த.க.பாடசாலை , அடம்பன் தேசிய பாடசாலை , பாலைக்குழி றோ.க.த.பாடசாலை , நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயம் , சிலாபத்துறை முஸ்லீம் கலவன் பாடசாலை , முசலி தேசிய பாடசாலை மற்றும் அடம்பன் றோ.க.த.க. பாடசாலை மாணவர்கள் இவ்போட்டியில் கலந்து கொண்டனர்.
இவ்போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் மடு கல்வி வலய 63 மாணவர்களும் , மன்னார் கல்வி வலயத்தின் 29 மாணவர்களும் மொத்தம் 92 மெடல்களைப் பெற்றுள்ளனர்.
இதில் இம்மாணவர்கள் 50 தங்க மெடலும் , 32 சில்வர் மெடலும் . வெண்கலம் மெடல் 10 ம் பெற்று மன்னாரில் முதன்முறையாக சாதனைப் படைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்திலிருந்து 38 மாணவர்கள் கலந்து கொண்டதில் 36 மாணவர்கள் தேசிய கராத்தே போட்டியில் கலந்துகொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆறு மாணவர்கள் மாகாண சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கு பயிற்றுவிப்பாளராக கராத்தே தலைமை ஆசிரியராகவும் சக்கூறா சோட்டக்கான் கராத்தே மன்னார் கிளையின் தலைவருமான விடத்தல்தீவைச் சேர்ந்த ஆசிரியர் அருளானந்தம் அமல்ராஜ் (கருப்புப்பட்டி 4 வது டான்) அவர்கள் ஈடுபட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.