Home Srilanka Politics வெளியக சுயநிர்ணயத்தை கோருவதற்குத் தயங்கோம் ரணிலின் முடிவு என்னவென பொறுத்திருந்து பார்ப்போம்.

வெளியக சுயநிர்ணயத்தை கோருவதற்குத் தயங்கோம் ரணிலின் முடிவு என்னவென பொறுத்திருந்து பார்ப்போம்.

0

“முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி – நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி – தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்துள்ளோம். அவர் என்ன முடிவை எடுப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம் (26) நடைபெற்ற சர்வகட்சி மாநாடு தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பலரும் தத்தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

பொதுவாக இந்தப் பேச்சில் முன்னேற்றம் எதனையும் நாம் அவதானிக்கவில்லை. ஆனால், சமாதானமாக வழிநடத்தப்பட வேண்டிய விடயங்களில் பெரிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. கருமங்களை முன்னெடுப்பதற்குக் குழுக்களை ஜனாதிபதி நியமிப்பார் என எண்ணுகின்றோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் முக்கிய விடயங்களை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், வடக்கு – கிழக்கில் சரித்திர ரீதியாகத் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் – போன்ற விடயங்களை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம். இந்தக் கருமங்கள் நிறைவேற முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் தங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்றும் ஜனாதிபதியிடம் கூறியுள்ளோம்.

முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் இந்தக் கருமங்களை நாட்டின் நன்மை கருதி – நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி – தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்துள்ளோம். அவர் என்ன முடிவை எடுப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.” – என்றார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version