இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓவியர் மாருதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பிரபல ஓவியரான மாருதியின் இயற்பெயர் இரங்கநாதன். விகடன், குமுதம், குங்குமம், கண்மணி, பொன்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. ஓவியம் மட்டுமின்றி ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிசெய்திருக்கிறார்.
அவரின் இறப்பு குறித்து ஓவியர் அரஸிடம் பேசினோம். “அவரின் மகள்கள் இரண்டு பேரையும் பூனேவில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அவர் மட்டும் இங்கே இருந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை மோசமானதால், அவரின் மகள்கள் பூனேவுக்கே கூட்டிச் சென்றனர். ஆனால், அவருக்கு அங்கே தனியாக இருப்பது போன்ற உணர்வு இருந்ததால் அவர் மட்டும் திரும்பச் சென்னைக்கே வந்துவிட்டார்.
ஆனால் இங்கே வந்த பிறகு அவருக்குத் திரும்ப உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 1969-ல் இருந்தே ஓவியங்கள் வரைந்து வந்திருக்கிறார். அவரின் மறைவு கலைத்துறைக்குப் பெரிய இழப்பு!” என்றார்.
ஓவியர் மாருதியின் மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கல்