அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் மீது தாக்குதல்; மாணவர்கள் இருவர் கைது
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரைப் பெற்றோர் சிலரும் மாணவர்களும் இணைந்து தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்று (26) பாடசாலை நிறைவடைந்து வௌியேறிய போது, சில மாணவர்களும் பெற்றோரும் இணைந்து ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாடசாலையின் ஒழுக்கக்கோவையைச் செயற்படுத்துவதில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ள பொலிஸார், ஏனையோரைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.