ஒடிசாவில் உள்ள ஓ டிவி, தனது முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது.
ஒடிசாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.
லிசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளில் செய்திகளை வாசிக்க முடியும்.
அறிவியல் தொழில் நுட்பங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக கம்பியூட்டர் சார்ந்த தொழில் நுட்பங்களின் வளர்ச்சி பிரமாண்டமானவையாக உள்ளன. இத்துறையில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial intelligence (AI) தொழில் நுட்பத்தில் பல புதுமைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று, AI தொழில்நுட்பம் மூலம் முதல்முறையாக செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. உருவம், முக பாவனை, உதட்டு அசைவுகள் அச்சுஅசலாக மனிதர்களைப் போலவே இருக்கும். குரலை மட்டும் பதிவு செய்து அமைத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவிலும் AI தொழில் நுட்பத்தில் மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள ஓ டிவி, தனது முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது. பிராந்திய மொழியில் இதுதான் இந்தியாவின் முதல் பெண் செயற்கை நுண்ணறிவு வாசிப்பாளர்.