Home Srilanka தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து உழைப்பேன்! – இலண்டனில் ரணில் சபதம்.

தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து உழைப்பேன்! – இலண்டனில் ரணில் சபதம்.

0

தமிழ்ப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து உழைக்க விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும், கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும் முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாபருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜூன் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இலண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் 40 ஆவது ஆண்டு விழாவின் போது இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் சவால்கள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை சிக்கலான தலைப்புகளாக மாறியுள்ள தற்போதைய காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது பற்றி ஆராய உலகத் தலைவர்கள் இந்த ஆண்டு ஒன்று கூடியிருந்தனர்.

ஸ்டீபன் ஹாபர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டமை, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அமுல்படுத்தப்பட்ட கொள்கை வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என்பன தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையின் நிதி வாய்ப்புகளை வலுப்படுத்தி நீண்டகாலத்துக்குச் சாதகமான வர்த்தக சமநிலையை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தாராளமய பொருளாதார நெகிழ்வுக் கொள்கையை துரிதப்படுத்தல் மற்றும் முதலீடுகளை கவர்வதை நோக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் தமிழ்ப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து உழைக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை, புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பது குறித்தும் ஜனாதிபதி இங்கு கருத்துத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வரையறுப்பது தொடர்பில் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நிலவி வந்த சர்ச்சை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது எனவும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

காணாமல்போனோர் அலுவலக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version