இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து இன்று அதிகாலை 2.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று அதிகாலை 3.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கன மழை கொட்டியது. நேற்று இரவும் பலத்த மழைபெய்தது. இதனால் வானிலை மோசமாக இருந்ததால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு கொழும்பு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:05 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஆகியவை மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன.
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானம், துபாயில் இருந்து சென்னை வரும் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த விமானங்கள் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.