Home India மெரினாவில் குப்பைகள் குவிய யார் காரணம்?

மெரினாவில் குப்பைகள் குவிய யார் காரணம்?

0

உலகிலேயே அழகான கடற்கரைகளில் ஒன்று நம்மூர் மெரினா. அதே போல் மற்றொரு அமைதியான கடற்கரை பெசன்ட் நகர்.

சென்னையின் இந்த அழகிய கடற்கரைதான் எத்தனையோ பிரபலங்களின் ஆற்றலையும், அறிவையும் வளர்க்க உந்துசக்தியாக இருந்திருக்கின்றன. இந்த அழகிய கடற்கரைகளை கண்டு ரசிக்கவும், காலாற நடந்து காற்று வாங்கி உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டவும் தினமும் ஏராளமானோர் இங்கு வருகிறார்கள்.

வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் சுற்றுலா பயணிகளும் அழகை ரசிக்க வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்த கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு கட்டமாக கடற்கரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கடைகளை வரிசையாக முறைப்படுத்தினார்கள். தினமும் கடற்கரை மணலை சுத்தப்படுத்த 5 எந்திரங்கள் சுற்றி சுற்றி வருகின்றன.

அதாவது மணலில் இருக்கும் குப்பை கழிவுகளை சல்லடை போட்டு தேடி சேகரிப்பது தான் இந்த எந்திரங்களின் வேலை. அப்புறமென்ன கடற்கரை நேர்த்தியாகத் தானே இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதிகாலையில் வெறும் காலில் கடற்கரை மணலில் நடைபயிற்சி சென்றால் காலுக்கு பாதுகாப்பு கிடையாது.

உடைந்து கிடக்கும் பாட்டில் துண்டுகள், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் பார்த்தால் முகம் சுளிக்க வைக்கிறது. நடப்பதற்கு பயமுறுத்துகிறது.

வார விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு வந்து பொழுதுபோக்க வரும் சில குடும்பத்தினர் கூறும்போது, கடற்கரை அசுத்தமாக மாறி வருவதால் கடற்கரைக்கு வருவதை தவிர்த்து விட்டதாகவும் அதற்கு பதிலாக வீட்டு பக்கத்தில் உள்ள பூங்காக்களுக்கு செல்வதாகவும் கூறினார்கள்.

கழிப்பிடங்கள் வெளிப்பார்வைக்குத்தான் பகட்டாக தெரிகின்றன. உள்ளே சென்றால் பராமரிப்பு இல்லாமல் நாற்றமடிக்கிறது. பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரும் இடத்தில் ஒரு கழிப்பறையை கூட சுத்தமாக, ஓட்டல்களில் இருப்பதை போல் பராமரிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டனர்.

பொதுமக்களின் மனக்குறைகள் பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடற்கரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை 2017-ல் 1447 ஆக இருந்தது. இப்போது 2500 கடைகள் உள்ளது. மொத்தம் 15 விற்பனையாளர்கள் சங்கம் உள்ளது. இந்த கடைகளில் இருந்து வரும் குப்பை கழிவுகள்தான் கடற்கரை மணற்பரப்பில் சிதறுகிறது.

கடைக்காரர்களிடம் குப்பை தொட்டிகளை வைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம் என்றனர். கடற்கரையில் உடைந்த மதுபாட்டில்கள் ஏராளமாக சிதறி கிடக்கிறது. இதற்கு பொதுமக்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடற்கரை பாதையை அழகுபடுத்தி பராமரிக்க, குடிநீர் வசதிகள் செய்ய, இயற்கையை ரசிக்க, உட்காரும் இடங்கள் அழகு குடைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய நாடு முழுவதும் அனுமதித்துள்ளது.

மெரினாவை பொறுத்தவரை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எல்லாம் காகிதத்தில்தான் எழுத்துக்களாக இருக்கின்றன. இன்னும் செயல் வடிவம் பெறவில்லை. இந்த அழகிய கடற்கரையில் நான் காற்று வாங்க போனேன்.

ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று தான் அன்று பூரித்தனர். ஆனால் இன்று நான் காற்று வாங்க சென்றேன் கொஞ்சம் நோயை வாங்கி வந்தேன் என்று சொல்லும் அளவில் தான் மெரினா கடற்கரை உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version