Home India செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு.

செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு.

0

அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக மததிய குற்றப்பிரிவு போலீசில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இது தொடர்பான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி சம்மனையும் அனுப்பினார்கள். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையில் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதன் முடிவில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அருள்மணி என்பவர் அளித்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் கூட்டு சதி, மோசடி, 5 பிரிவுகளின் கீழும், கணஷே்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்துள்ளனர். கோர்ட்டின் அனுமதி கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள 3 அடைப்புகளை சரி செய்ய இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆபரேஷன் முடிந்ததும் செந்தில் பாலாஜியை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஓய்வு முடிந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சில நாட்கள் பொறுமை காக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். எந்த ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்ட நபர் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது என்பது சட்டப்படி சாத்தியமாகும்.

இதற்காகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சில நாட்கள் கழித்து செந்தில் பாலாஜியிடம் தீவிரமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் முடிவில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அனுராதா ரமேஷ் என்ற பெண் தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் செந்தில் பாலாஜியின் பினாமி ஒருவருக்கு ரூ.10.9 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண்ணின் நிலம் எந்த வகையில் இது போன்று விற்பனை செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள 3 வழக்குகள் அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version