யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜுலை முதலாம் திகதி முதல் தரம் 9 இற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதைத் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், பொலிஸார், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதால் மாணவர்களுக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.