Home India Finance உதயநிதி ஸ்டாலின் வங்கிக் கணக்கு முடக்கம்

உதயநிதி ஸ்டாலின் வங்கிக் கணக்கு முடக்கம்

0

சட்டவிரோதப் பரிவர்த்தனை தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனின் வங்கிக் கணக்கை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கனிம வள வர்த்தக வியாபாரத்துக்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனம், சென்னையில் செயல்பட்டு வந்த கல்லால் குழுமத்தில் கடந்த ஆண்டு ரூ.114 கோடி முதலீடு செய்தது.

ஆனால், போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை மத்திய குற்றப் பிரிவில், கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது போர்ச்சுக்கல் நிறுவனம் புகார் அளித்தது.

இந்தப் புகாரின் பேரில் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கல்லால் குழுமம் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அதன் இயக்குநர் மற்றும் நிர்வாகிகள் சரவணன், பழனியப்பன், விஜய் ஆனந்த் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் ரூ.300 கோடி வரை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனடிப்படையில், கல்லால் குழுமம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா குழுமத்திடம், கல்லால் நிறுவனம் பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 16-ம் தேதி லைகா நிறுவனம் தொடர்புடைய 8-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சென்னையில் உள்ளஉதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

அப்போது, கல்லால் மற்றும் லைகா நிறுவனத்திலிருந்து ரூ.1 கோடி வரை உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய நிலையில், கல்லால் குழுமத்துக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளையும், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமான, ரூ.34.70 லட்சம் இருப்பு கொண்ட வங்கிக் கணக்கையும் முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version