Home Srilanka Politics உதவிக்கு முன்வராவிட்டால் சட்ட நடவடிக்கை

உதவிக்கு முன்வராவிட்டால் சட்ட நடவடிக்கை

0

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளைத் துப்பரவு செய்து சுகாதாரத் துறையினருக்கு உதவி புரிய வேண்டும். அவ்வாறு உதவி செய்ய முன்வராவிட்டால் காணி உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட அரச அதிபர் அ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் நேற்றைய தினம் (22.05.2023) மாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான அதாவது 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 61 நோயாளர்கள் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து டெங்கு நுளம்புகளின் ஆய்வுகளின் அடிப்படையில் நோயாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களின் அடிப்படையிலும் மன்னார் பிரதேசத்தில் எமில் நகர், பெரியகமம், உப்புக்குளம், மூர் வீதி, போன்ற இடங்கள் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டு இவற்றுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 25, 26 ,27, ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்பட இருக்கிறது.

இதேவேளை, தனியார் காணிகள் பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டு அது தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், காணி உரிமையாளர்களை சில வேளைகளில் கண்டு பிடிப்பதில் கடினமாக இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே காணி உரிமையாளர்கள் இவ்வாறு வெற்றிடமாகக் காணப்படுகின்ற காணிகளைத் தூய்மைப் படுத்தி டெங்கு பரவலைத் தடுப்பதற்கு எமக்கு உதவ முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version