Friday, December 27, 2024
HomeSrilankaஇஸ்ரேலுக்குச் சார்பாக இலங்கை அரசு அறிக்கை!

இஸ்ரேலுக்குச் சார்பாக இலங்கை அரசு அறிக்கை!

“இலங்கை அரசு இஸ்ரேலுக்குச் சார்பான வகையிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனத்திலுள்ள மக்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லை. இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே.”

இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற நீதித்துறை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய கிழக்கில் பெரும் யுத்தம் நிலவுகின்றது. இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் நான் அதிர்ச்சியடைந்தேன். அறிக்கை காஸாவில் உள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் மக்களை இலக்கு வைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஹமாஸ் தாக்குதலை நாங்கள் கண்டிக்கின்றோம். அதேபோன்று ஹமாஸ் இயக்கத்தால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால், காஸாவில் வாழும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஒரு வசனமும் அதில் இல்லை. அங்கு 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உணவு, நீர் இல்லை. 400 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுய பாதுகாப்புக்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. ஆனால், சுய பாதுகாப்பையும் கடந்து செயற்படுகின்றது.

இங்கே முன்னாள் ஜனாதிபதி இருக்கின்றார். அவர் பலஸ்தீனத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டுள்ளார். காஸா மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் போர்க்குற்றம் என்று ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது என்பதற்காக காஸாவில் உள்ள அனைத்து மக்களும் பழியாக முடியாது. காஸாவில் உள்ள முஸ்லிம் மக்கள்  தொடர்பில் அரசின் அறிக்கையில் எந்த விடயமும் இல்லை. இந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். இது முழுமையாக இஸ்ரேல் பக்கத்துக்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையே.

நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. பாலஸ்தீனத்துக்கும் அவ்வாறான உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமை பாலஸ்தீனத்துக்கு வழங்கப்படவில்லை. இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments