Friday, December 27, 2024
HomeWorldதீவிரமடையும் காஸா பதற்றம்: இஸ்ரேல் சென்றடைந்தார்.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.

தீவிரமடையும் காஸா பதற்றம்: இஸ்ரேல் சென்றடைந்தார்.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலானது தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலை சென்றடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – அமெரிக்க ஒற்றுமையை நிலைநிறுத்தவும், போர் திட்டங்கள் தொடர்பில் விவாதிக்கவும் பைடனின் இந்த விஜயம் காணப்படுவதாக அமெரிக்க அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் காஸாவின் வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலில் பலர் பலியான நிலையில், பைடனின் அரபு நாடுகளுக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இரு தரப்பும் பொறுப்புக்கூற மறுக்கும் நிலையில் பாலஸ்தீனிய அதிகாரிகளும் இஸ்ரேலிய இராணுவமும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்ட விடயமானது சர்வதேச மட்டத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் இன்று இஸ்ரேலை சென்றடைந்த பைடனை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வடவேற்றுள்ளார்.

ஜோ பைடன் இஸ்ரேலிய அமைச்சரவையை சந்திப்பதற்கு முன்பு போர் தொடர்பான மிக சிறிய மட்டுப்படுத்தப்பட்ட இருதரப்பு சந்திப்பொன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இஸ்ரேலின் போர் நோக்கங்களை நன்கு புரிந்துகொள்வதற்கான விடயங்களாக பைடனின் சந்திப்பு அமையப்பெறும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கருத்து தெரிவித்திருந்தார்.

“ஜோ பைடன் சில கடினமான கேள்விகளைக் கேட்பார். ஆனால் அவர் இஸ்ரேலிடம் அவற்றை ஒரு நண்பராகக் கேட்பார்,” என்று செய்தியாளர்களிடம் மேலும் கூறியிருந்தார்.

மனிதாபிமான உதவிகள் அனைத்தும் காஸாவுக்குள் கொண்டு செல்வதை உறுதி செய்யவே அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் போரின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை சுமார் 4,000 ஐ கடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதில் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா அல்-அஹ்லி வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments