Saturday, December 28, 2024
HomeSrilankaஹர்த்தாலுக்கு ஆதரவைக் கோரும் தமிழ்க் கட்சிகள்!

ஹர்த்தாலுக்கு ஆதரவைக் கோரும் தமிழ்க் கட்சிகள்!

“தமிழ்பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து இந்தக் ஹர்த்தாலைப் பெருமெடுப்பில் மேற்கொள்ளுவதற்கு வடக்கு – கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடைய முழுமையான ஆதரவை வேண்டி நிற்கின்றோம்” – என்று ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்சி.வி.விக்னேஸ்வரன் யாழ். இல்லத்தில் இன்று (13) மாலை நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களுக்கான நீதி என்பது தொடர்ந்து மறுதலிக்கப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியும், சிங்கள பௌத்த மக்கள் வாழாத தமிழ், முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் தொடர்ச்சியாகக் காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பௌத்த கோயில்கள் நிறுவுவதற்கான வேலைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்பதைக் கண்டித்தும், நிறுத்தக் கோரியும், மட்டக்களப்பு – மயிலத்தமடு  மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடைபெறவுள்ளது.

இங்கிருந்து தொலைபேசி மூலமாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனுடனும் (ஜனா), வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் கலந்துரையாடியுள்ளோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஹர்த்தால் தொடர்பான அடுத்த கட்டம் நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயவுள்ளோம்.

இங்கிருந்து கிழக்கு மாகாணத்துக்குச் சென்று அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து இந்தக் ஹர்த்தாலைப் பெருமெடுப்பில் மேற்கொள்ளுவதற்கு வடக்கு – கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடைய முழுமையான ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசு வெறுமனே பார்வையாளர்களாகவே பார்க்கின்றது. இந்த எண்ணத்தை மாற்றியமைக்கும் முகமாக ஒட்டுமொத்தமாகத் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாகவே இந்தக் ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாகப் பார்க்க முடியாது. மக்களுக்கான நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்தச் சிங்கள அரசாலும் அரச இயந்திரத்தாலும் அவமதிக்கப்படுகின்றது என்ற விடயத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிராகவே குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளிவந்துள்ளன. அதுபோல்தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை

மேலும், தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பவுள்ளன. தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாகவும் கொழும்பில் இருக்கக்கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம்.” – என்றார்.

நேற்று நடைபெற்ற ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments