ஒரு நபரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் 12 வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் “புதன், குரு, சுக்கிரன்” ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக இருந்தால் அந்த ஜாதகருக்கு கல்விக்கடவுளான சரஸ்வதியின் அருளாற்றல் நிறைந்த “சரஸ்வதி யோகம்” ஏற்படுகிறது.
அதேபோல் குரு,புதன் இதில் ஏதாவது ஒருவர் இரண்டில் இருந்தால் ஞானத்தாலே அனைத்தையும் அறிவார்கள் இதுவும் சரஸ்வதி யோகம்தான்!
இந்த சரஸ்வதி யோகம் கொண்ட நபர்கள் மிக இளம் வயதிலிருந்தே பல விதமான கல்வி மற்றும் கலைகளை ஆர்வமுடன் பயில்வார்கள்.
வயதில் பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற இங்கிதங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய விடயங்களை தாங்களாகவே கற்று கொள்வார்கள்.
சிறந்த எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சு மற்றும் எழுத்து திறன் கவிதை நயம் மிக்கதாகவும், வெகுஜனங்களை கவர்ந்திழுக்க கூடியதாகவும் இருக்கும்.
ஓவியம், சிற்பம், இசை போன்ற கலைகளில் சிறந்த திறமையாளர்களாக விளங்குவார்கள். ஒரு சிலர் திரைப்படம், நாடகம், இசையமைப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டு மக்களின் மிகுந்த அபிமானத்தையும், பெருமளவில் செல்வத்தையும் ஈட்டுவார்கள்.
பெருமளவில் புகழ், பணம் போன்றவற்றை ஈட்டினாலும் இறையனுபவம் பெறுவதற்கான விருப்பமும் ஞானத்தேடலும் இவர்களிடம் அதிகம் இருக்கும்.