ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடத்தில் நற்பெயரை சம்பாதித்திருக்கும் நடிகர் ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாட்னர் திரைப்படம். அவருக்கு வெற்றிப்படமாக அமையுமா? ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
ஹீரோ ஆதி பிசினஸ் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் கடன் வாங்கி நஷ்டமடைகிறார். பிறகு வாங்கிய கடனை வட்டியுடன் கட்டு இல்லையென்றால் உங்கள் வீட்டுப் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடு என கடன் கொடுத்தவர் கேட்க வேறு வழி இல்லாமல் குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாகவும் தங்கச்சியின் திருமண வாழ்க்கைக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காக பட்டணத்திற்கு வருகிறார் நாயகன் ஆதி. அங்கு தன் நண்பன் யோகி பாபுவை சந்தித்து நிலைமையை சொல்லி சம்பாதிக்க ஐடியா கேட்கிறார். அவரோ திருட்டுத்தனமாக சம்பாதிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் விஞ்ஞானி பாண்டியராஜன் சில ஆய்வுகளை செய்து நாயை பூனை போல் கத்துவதை கண்டுபிடிக்கிறார். இதே போல் வேறு சில ஆய்வுகளையும் செய்கிறார். இவருடைய ஆய்வுகளை ஒரு கம்ப்யூட்டர் சிப்பில் பதிவேற்றுகிறார். அந்த சிப்பை திருடி தருமாறு ஒரு கொள்ளை கும்பல் யோகி பாபு மற்றும் ஆதியிடம் பேரம் பேசுகிறது. அந்தச் சிப்பை திருடுவதற்காக ஆதியும், யோகி பாபு பாண்டியராஜனின் ஆய்வுக்கூடத்திற்குள் நுழைகிறார்கள் .அங்கு ஏற்பட்ட குளறுபடியால் யோகி பாபு, ஹன்சிகா மோத்வானியாக மாறிவிடுகிறார். அதன் பிறகு நடைபெறும் களேபரங்கள் தான் படத்தின் கதை.
முதல் பாதி திரை கதையை விட இரண்டாம் பாதியில் யோகி பாபு ஹன்சிகா மோத்வானியாக மாறிய பிறகு, கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் குழப்பமும் அதனை சுவாரசியமாக காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் சிரிப்பை வரவழைக்கிறது. ஆங்காங்கே சில A தனமான காமெடிகள் இருந்தாலும்.. சுவாரசியமாக திரைக்கதை பயணிக்கிறது. குறிப்பாக உச்சகட்ட காட்சி செம கலகல.
ஆதி கிராமத்து பையன் கதாபாத்திரத்தில் தோற்ற ரீதியாக பொருந்தவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்குள் தன்னை சிரமப்பட்டு பொருத்திக் கொள்கிறார். பாலக் லால்வானி ஹீரோயினாக வந்து வழக்கம் போல் நாயகனை காதலித்து ஒரு டூயட் பாடி உச்சகட்ட காட்சியில் ஹீரோவுடன் சேருகிறார்.
இந்தப் படத்தில் பொம்பள யோகி பாபுவாக ஹன்சிகா மோத்வானி அட்ராசிட்டி செய்திருக்கிறார். அவருடைய உடல் மொழி, நடனம், உச்சரிப்பு.. அனைத்தும் சிறப்பு. இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிகைகள் அரிதாகவே நடித்திருந்தாலும் ஹன்சிகா தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பாடல்கள் பின்னணியிசை படு சுமார். ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. முதல் பாதி படத்தொகுப்பில் எடிட்டர் இன்னும் சற்று கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் முதல் பாதியும் சுவாரசியமாக இருந்திருக்கும்.