Saturday, December 28, 2024
HomeSrilankaஇலங்கையின் சுகாதாரத்துறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

இலங்கையின் சுகாதாரத்துறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

“மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். வெளிநாட்டில் படிக்கும் விசேட மருத்துவர்கள் நாடு திரும்புவதாக இல்லை . விசேட வைத்தியர்கள் உட்பட வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவான தீர்வை வழங்க தவறினால் தரமான சுகாதார சேவையை வழங்குவதில் அரசு தோல்வியடையும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 27/2இன்கீழ் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மனித வளங்களை முறையாக நிர்வகிக்காததால் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது வெளிநாடுகளில் பயிற்சி பெற்றுவரும் விசேட மருத்துவ நிபுணர்கள் இலங்கையின் நிரந்தர சேவையில் இணையாமல் முழுநேரமாக வெளிநாட்டில் பணிபுரிவதாலும், புதிய மருத்துவர்கள் சுகாதார அமைச்சில் இணைந்து பணியாற்ற மறுப்பதாலும், பட்டப் பின் படிப்பை கற்காத காரணத்தால் இந் நாட்டில் விசேட மருத்துவர்கள் உட்பட மொத்த மருத்துவர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கான விரைவான தீர்வுகளை வழங்க அரசு முன்வராவிட்டால், நாடளாவிய ரீதியில் தரமான சுகாதார சேவைகளை சமமாக வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, மருத்துவர்களின் சேவையில் திருப்தியை ஏற்படுத்தும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகள் உள்ளன.

01. இந்த நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா? அப்படியானால் அவை என்ன? தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத மருந்துகள் அவசர கொள்முதலின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்றனவா? அவ்வாறு கொண்டுவருவது அத்தியாவசிய மருந்துகள் மட்டுமா? அவ்வாறு எனின், அதன் தரத்தை உறுதிப்படுத்த முடியுமா? அதற்கு யார் பொறுப்பு.

02. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட மருந்துகளுக்கு வழங்குநர்களுக்கான கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்படுகின்றதா? அவ்வாறாயின், வழங்குநர்களுக்கு அரசாங்க மருந்துக் கூட்டுத்தாபனத்தால் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு?பணத்தை விரைவாகச் செலுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? அவ்வாறாயின், அது எப்போது? அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக சுகாதார அமைச்சால் எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது? அது சுகாதார அமைச்சுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் எத்தனை சதவீதம்? அத்தியாவசியமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ய அரசு அதிக பணம் செலவழிக்கவில்லையா?

03. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டம் மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் ஆகியவற்றை நீக்கி புதிய சட்டங்களை கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா? சுகாதாரத்துறையில் நடக்கும் முறைகேடுகள், மோசடிகளைத் தடுக்க அரசு அவசர அவசரமாக புதிய சட்டங்களைக் கொண்டு வருவதை விடுத்து, தற்போதுள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்களைத்தானே செய்ய வேண்டும்?

04. இந்நாட்டின் முழு அரச வைத்தியசாலை முறைமையிலும் தற்போது பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை மற்றும் பற்றாக்குறையான மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்த விரிவான அறிக்கையை இச்சபையில் முன்வைக்க முடியுமா? எந்தெந்த பகுதிகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது? கடந்த 2022 ஆம் ஆண்டும் மற்றும் இந்த ஆண்டும் இந்த குறிப்பிட்ட சில மாதங்களில் எத்தனை மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்? வெளிநாடு சென்றமையால் இந்த நாடு இழந்துள்ள விசேட மருத்துவ நிபுணர்கள் எத்தனை பேர்? அது எந்தெந்தத் துறைகளில்? சுகாதார அமைச்சுக்கு முன்னறிவிப்பு இன்றி மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாகச் அறிக்கையிடப்படுகின்றனவா? அவ்வாறாயின் அதன் எண்ணிக்கை? முன்னறிவிப்பு இன்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் என்ன? இதனால் மருத்துவமனை வளாகத்தில் ஏற்படும் இடையூறுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்ததா? அது எப்படி? புத்திஜீவிகள் வெளியேற்றம் பற்றி பேசினோம் இன்று நேற்றல்ல. பல மாதங்களுக்கு முன்பு. ஆரம்பத்திலேயே இது குறித்து முறையான தீர்வுகளை அரசு அணுகியிருக்கலாம். இப்போது நடப்பது என்னவென்றால், நாட்டை விட்டு பெரும் எண்ணிக்கையிலானோர் வெளியேறிய பிறகு சில நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கின்றனர். அது சரி. இப்போதாவது பாதுகாக்கப்பட வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு ஏன் இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

05. மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை வரவழைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய டொலர்கள் தட்டுப்பாடு நிலவும் நாட்டில், வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது அரசுக்கு தெரியாதா? அரசு செய்ய வேண்டியது நாட்டில் இருக்கும் மருத்துவர்களைத் தக்கவைத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய மருத்துவர்களை இணைத்துக்கொள்ளும் வகையிலுமான திட்டங்களை அரசு உடனடியாகத் ஆரம்ப்பிக்க வேண்டுமல்லவா? இந்த மருத்துவத் துறையின் கல்வித் திட்டங்களில் தெளிவான மாற்றம் வர வேண்டும். பாரம்பரிய கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு சைட்டம் போன்ற பல்கலைக்கழகங்கள் முன்னுக்கு வருவதை எதிர்க்கும் காலாவதியான முறைக்குப் பதிலாக புதிய மருத்துவர்களை உருவாக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? எனக் கேட்கின்றோம். அத்துடன், இலவசக் கல்விக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இந்த மாற்றுத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். இலவசக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தி அதை அழிப்பது அல்ல. அதனைப் பாதுகாத்துக் கொண்டு இதையும் மேற்கொள்ள வேண்டும்.

06. மருத்துவர்கள் மற்றும் இன்டர்ன்ஷிப் மருத்துவர்களுக்கு பொருத்தமான புதிய சம்பள கட்டமைப்பு/அலவன்ஸ் வழங்க முடியாதா? நாடளாவிய ரீதியில் பணியாற்றும் வைத்தியர்களின் குடியிருப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளதா? எனவே, இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தக்க வைத்துக் கொள்ளும் போது இதுவும் ஒரு பெரிய பிரச்சினை.

07. மருத்துவர்கள் மட்டுமின்றி, தாதியர்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள், மருந்து ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல சுகாதார தொழில் வல்லுநர்கள் இன்று சுகாதாரத்துறையில் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆய்வு கூடங்கள், மருத்துவமனை வளாகங்களில் பல செயற்பாடுகள் முடங்கிக் கிடப்பது அரசுக்குத் தெரியாதா? இந்தத் துறைகளுக்குத் தேவையான உத்தியோகத்தர்களை விரைவாக நிரப்ப அரசு செயற்படுமா? எனவே, அது எப்போது?

08. இன்றும் அரசு மருத்துவமனை கட்டமைப்பில் சிடி ஸ்கேன் இயந்திரங்கள், எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள், கெட்லேப் இயந்திரங்கள் என பல இயந்திரங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் ஆதரவற்ற நிலையில் இருப்பது அரசுக்கு தெரியுமா? சேவை ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்க அரசு ஏன் செயற்படவில்லை? இது சுகாதார அமைச்சின் செலவை அதிகரிக்கவில்லையா?

09. இந்த நாட்டில் எத்தனை மாணவர்கள் மருத்துவ பீடங்களில் கல்வி கற்கின்றார்கள்? வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது பீடங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா? அதற்கு அரசு  என்ன தீர்வுகளை வழங்குகின்றது? அமைச்சரே குறிப்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்று நிறுவப்பட்டாலும் பௌதீக மற்றும் மனித வளங்கள் இல்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இவை இல்லாமல் மருத்துவர்களை எப்படி உருவாக்க முடியும்?

அதேபோன்று மற்றொரு தீவிர பிரச்சினை உள்ளது. மெனிங்கோ கொகொல் தடுப்பூசி இன்று நாட்டில் இல்லை. 12 மாதங்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு குறைபாடு. எமக்குக் கிடைத்த தகவலின்படி, அது இன்றும் தட்டுப்பாடாக உள்ளது. இது ஹஜ் புனித பயணத்திற்காகச் செல்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான விடயம் என்பது உங்களுக்குத் தெரியும். இது அவர்களுக்கு கட்டாயமாகும். இந்தக் குறைபாட்டை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

காலி சிறைச்சாலையில் தொற்றுநோய் பரவியுள்ளது. நாம் கேள்விப்பட்டபடி, தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாம். ஆனால் சுகாதார அமைச்சு அதை எடுக்க முயற்சிக்கவில்லையாம் என்றும் கேள்விப்பட்டோம். இதைப் பற்றி உடனடியாக பதில் சொல்ல முடியாவிட்டாலும் நாளைக்கு பதில் சொன்னாலும் பரவாயில்லை.

அதனால்தான் இன்று (நேற்று) சபாநாயகர் சபையில் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு இரண்டு எம்.பி.க்களைச்  சபைக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் எப்போதும் ஒரே மாதிரியான முடிவா எடுக்கப்படுகின்றது எனக் கேட்க விரும்புகின்றேன்.

துறைமுகத்தில் 13 ஏக்கர் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக இந்த அரசின் உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார்.
கழிவு உர அறிக்கை ஒரு வருடமாக கோப் குழுவில் விவாதிக்கப்படவில்லை. அரசின் பணத்தைத் திருடியவர்கள் நன்றாகச் செய்கிறார்கள். மேலும், ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு அலுவலரின் பெயரைக் குறிப்பிட்டார். அதிகாரி என்ற அலுவலர் மீது அபத்தமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட நல்ல அலுவலர்களை பாதுகாக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். செயலாளர் நாயகத்துக்கும் மற்றும் பிற அலுவலர்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இடமளிக்க மாட்டோம்.

நாங்கள் நன்றாக அவதானத்துடன் இருக்கின்றோம். பழிவாங்கல் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. மேலும் இந்த சபையில் கேள்வி கேட்டால் பயத்தில் ஓடி விடுகின்றார்கள். பதில் சொல்ல முதுகெலும்பு இல்லை. இந்த கோழைகளிடம் பதில் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சுகாதார அமைச்சரே நான் கேட்கும் இந்தக் கேள்விகள் பற்றிய தகவல் உங்களுக்கும் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கும் தெரியாவிட்டால் சுகாதாரத் துறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இவை எளிய தரவுகள். இந்த விடயங்கள் உங்களுக்கு தெரியாதா? இது ஒரு தேசிய துக்க நிலைமையாகும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments