“குருந்தூர்மலை விவகாரத்தில் இனவாத ரீதியான கருத்துக்களைக் கூறுபவர்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாடு மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளப்படும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதி வரிகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குருந்தூர்மலை தொடர்பில் இனவாதக் கருத்துக்கள் மூலம் தமது அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்குச் சிலர் முயற்சிக்கின்றனர். இது தொடர்பில் சரத் வீரசேகர மோசமான கருத்தை வெளியிட்டுள்ளார். நானும் சிறிதரன் எம்.பியும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அங்கு சென்றிருந்தபோது அங்கு ஆதிசிவன் ஆலயம் மாத்திரமே இருந்தது. குருந்தூர்மலைக்கு வெளியில் உள்ள விவசாயக் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயவே நாங்கள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கே எந்தவிதமான விகாரையும் இருக்கவில்லை. பின்னர் தொல்பொருள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்தார். அப்போது இந்து ஆலயத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார். இந்நிலையில் அங்கு புதிய நிர்மாணங்களுக்கு நடவடிக்கை எடுத்தபோது நீதிமன்றம் அதற்குத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர நீதிமன்றத் தீர்ப்பையும், நீதிவானின் தனிப்பட்ட விடயங்களையும் மிகவும் கேவலமாகப் பதிவு செய்துள்ளார். நாடு பொருளாதார நெரக்கடியில் சிக்கி வெளிநாட்டுக் கடனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் தமது அரசியலைத் தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தை மூலதனமாகப் பயன்படுத்துகின்றனர்.
தொல்பொருட்களை அழிப்பதற்கோ, தொல்பொருள் அடையாளங்களை அழிப்பதற்கோ விடுதலைப்புலிகள் தயாராக இருக்கவில்லை. அங்குள்ள மக்களும் அதனைச் செய்யவில்லை. மன்னாரில் விகாரையொன்றுக்காக 2004ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளும் காணிகளை வழங்கியுள்ளனர். இதனை அந்த விகாரையுடன் தொடர்புடைய பிக்குவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சரத் வீரசேகர போன்றோர் பொய்யான கருத்துக்களை கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பையும். நீதிவானின் தனிப்பட்ட விடயங்களையும் சபையில் கூறுவது தொடர்பில் ஆட்சியாளர்களே வெட்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிவான் தொடர்பில் தனிப்பட்ட விடயங்களை கூறுவது கண்டிக்கத்தக்கதே.
எங்கும் பௌத்த விகாரைகளையும் இல்லாமல் செய்வதற்குத் தமிழர்கள் எந்தவகையிலும் முயற்சிக்கவில்லை என்பதனை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழர்களின் பூர்வீக இடங்களை இல்லாது செய்து அதில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சிகளையே மக்கள் எதிர்க்கின்றனர்.
குருந்தூர்மலை தொடர்பாக இனவாத ரீதியான கருத்துக்கள் உள்ளன. இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இனவாதக் கருத்துக்களைக் கூறுபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த விடயத்தை ஆட்சியாளர்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். சிலரின் கருத்துக்கள் வன்முறைகளைத் தூண்டும் வகையில் உள்ளன. உண்மையை வெளிப்படையாகப் பேசுங்கள். இனவாதக் கருத்துக்களை நிறுத்தாவிட்டால் நாடு மிகவும் மோசமான நிலைக்கே செல்லும்.” – என்றார்.