அறிமுக நடிகர் ஸ்ரீபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அங்காரகன்’ எனும் திரைப்படத்தில் வலிமையான வில்லன் வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருப்பதால், அவர் மீண்டும் வில்லனாக நடிக்க தொடங்கியிருக்கிறார் என பட குழுவினர் உற்சாகமாக தெரிவித்தனர்.
ஒளிப்பதிவாளரும், அறிமுக இயக்குநருமான மோகன் டச்சு இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அங்காரகன்’. இதில் சத்யராஜ், ஸ்ரீபதி, ‘அங்காடித் தெரு’ மகேஷ், நியா, ரெய்னா காரத், ரோஷன், அப்புகுட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கே சி பி பிரபாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மோகன் டச்சு மற்றும் ஆர். கலைவாணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கருந்தேள் நாகராஜ் வசனம் எழுத, பாடலாசிரியர் கு. கார்த்திக் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜூலியன் & ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் எட்டாம் திகதி முதல் உலகம் முழுதும் படமாளிகையில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி நாயகனும், திரைக்கதை ஆசிரியருமான ஸ்ரீபதி பேசுகையில், ” நானும், மோகன் டச்சுவும் நண்பர்கள். சிறிய முதலீட்டில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டோம். அங்காரகன் படத்தின் கதையை இணைந்து எழுதினோம்.
எழுதிய பிறகு காவல்துறை உயரதிகாரி வேடத்தில் சத்யராஜ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரை தொடர்பு கொண்டு பேசினோம். முதல் சந்திப்பில் ‘நான் ஹீரோ நீங்கள் வில்லன்’ என்று சொன்னவுடன், கதையை மீண்டும் முழுவதுமாக கேட்டார்.
அதன் பிறகு அந்த கதையை சரியாக புரிந்து கொண்டிருக்கிறேனா..! என்பதற்காக அவரே முழு கதையும் விவரித்தார். அதன் பிறகு வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் பட குழுவுடன் இணைந்தவுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
அதன் பிறகு தயாரிப்பாளரிடம் பேசி படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்து உருவாக்கியிருக்கிறோம். அற்புதமான ஹாரர் திரில்லராக இத்திரைப்படம் தயாராகி இருக்கிறது. செப்டம்பர் எட்டாம் திகதியன்று வெளியாகிறது. சத்யராஜ் மீண்டும் வில்லனாக நடித்திருக்கிறார். இது அனைத்து ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.