Saturday, December 28, 2024
HomeSrilankaதண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமான 04 படகுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமான 04 படகுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ளதாக நீதிமன்றம் தீர்ப்புவழங்கியிருந்த நிலையில் மணலாற்றுப் பகுதி மற்றும் அண்மித்த பகுதிகளில் ஆக்கிரமித்துக் குடியேறிய சிங்களவர்கள் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இக்குளத்தையும் ஆக்கிரமித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 38 சிங்கள மீனவர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

அதனையடுத்து சிங்கள மீனவர்களை பிடித்த தமிழ் மீனவர்களில் 17 பேரை பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன் தண்ணிமுறிப்பு குளத்தில் பொலிஸாரின் துணையுடன் சிறிலங்காப் படையினர் மணல் அகழ்வில் ஈடுபடுவதும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியாகியிருந்தது.

இப்படியான ஓர் நிலையில் தான் அதற்கான ஓர் பழிவாங்கலாக, மிரட்டலாகவே தான் இன்று அப்பகுதி தமிழர்களுக்கு சொந்தமான படகுகள் எரித்து அழிக்கப்பட்டிருக்கிறது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா அரசின் இனஅழிப்புப் போரினால் முற்றாக அனைத்தையும் இழந்த அப்பகுதி தமிழ் மக்களின் பொருளாதாரம் மீண்டுமோர்தடவை அழிக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் கடலில் சிங்கள மீனவர்களினதும், இந்திய மீனவர்களினதும் அத்துமீறல் மிகமோசமாக நடந்தேறிவருகிறது. இதனால் தமிழர்களின் கடல்சார் பொருளாதாரம் அழிவடையும் நிலையில் உள்ளது. அப்படியிருக்கையில் தான் நன்னீர் மீன் வளமும் ஆக்கிரமிப்புக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது.

தமிழர் தாயகத்தின் இதயபூமியாக கருதப்படும் மணலாற்றில் சிங்களவர்களை வலிந்து குடியேற்றி வடக்கு கிழக்கு இணைப்பை துண்டிக்கும் வேலைகளைத்தான் பல தசாப்தங்களாக சிறிலங்கா அரசு செய்துவருகிறது. அவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் தான் இன்று தண்ணிமுறிப்பு வரை ஆக்கிரமித்து வந்துநிற்கிறார்கள்.

ஆக்கிரமிப்புகளை செய்யமாட்டோம் என பல தடவைகள் ஜனாதிபதி ரணில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் சர்வதேச நாடுகளை ஏமாற்றி உதவிகளைப் பெறும் நோக்கில் கூறியபோதும் அண்மைக்காலமாகவே மிகவேகமாக தமிழர் தேசத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments