Sunday, December 29, 2024
HomeSrilankaPoliticsபிரேமதாஸவின் உரோமத்துக்குக் கூடப் பொருந்தாதவர் சஜித்!

பிரேமதாஸவின் உரோமத்துக்குக் கூடப் பொருந்தாதவர் சஜித்!

“நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்போது அதனை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. அந்தத் தருணத்தில் எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் முன்வரவில்லை.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

“வட்டுக்கோட்டை வாழ் மக்களை நான் நம்புகின்றேன். இந்த நேரத்தில் எனது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிகளையும் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனும் நானும் ஒன்றாக நாடாளுமன்றம் சென்றோம். மகேஸ்வரன் ஒரு போராளி; ஆயுதமின்றி போராட்டம் செய்தவர். அவர் வடக்குப் பிரச்சினையை மட்டுமல்லாது முழு இலங்கையிலும் ஏற்படும் பிரச்சினை பற்றி பேசிய ஒருவர்.

1948 இல் இந்த ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இனத்தவர்களையும் இணைத்தே உருவாக்கப்பட்டது. வேறுபாடு அற்ற ஒரு கட்சியே எமது கட்சி. டி.எஸ் சேனநாயக்க இந்தக் கட்சியை இலங்கையருக்கான கட்சியாகவே உருவாக்கினார். ஆகையால் இப்போதும் பலமாக எமது கட்சி உள்ளது.

பின்னர் பண்டாரநாயக்கவால் உருவாக்கப்பட்ட கட்சி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) பௌத்த சிங்கள பேரினவாதத்தை அடிப்படையாகக்கொண்டது. பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் பலர் உருவாக்கினர்.

முப்பது வருடங்களாக யுத்தம் தொடர்ந்தது. ஜே.வி.பியும் யுத்தத்தில் ஈடுபட்டது. இதன் விளைவால் எமது நாட்டின் எதிர்காலம் படுபாதாளத்துக்குள் சென்றது. பொதுமக்கள் அல்லல்பட்டார்கள்; அரசியல்வாதிகள் குதூகலமாக இருந்தார்கள்.

எப்போதெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி இல்லாமல் போகின்றதோ அப்போதெல்லாம் நாடு கீழே விழுந்தது. நாடு கீழ் விழுந்த போதெல்லாம் அதனைத் தூக்கி விட்டது ஐக்கிய தேசியக் கட்சியே

ஸ்ரீமாவே பண்டாரநாயக்க, மஹிந்த மற்றும் கோட்டாவின் ஆட்சிக் காலங்களில் நாடுகள் பாதாளத்தினுள் தள்ளப்பட்ட போதெல்லாம்  அதனை மீட்டெடுத்தது ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது எதிர்க்கட்சியைப் பொறுப்பேற்கச் சொல்லும்போது டலஸ் அழகப்பெரும, அநுரகுமார, சஜித் என அனைவரும் ஏதோவொரு காரணத்தச் சொல்லி தப்பித்தார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரே காணப்பட்டார். அவரே நாட்டை மீட்டெடுத்தார்

2019 ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்தில் சஜித் முறையான முடிவை எடுத்திருந்தால் நாடு பொருளாதார நெருக்கடிக்குச் சென்றிருக்காது. சஜித் தனது தகப்பன் பிரேமதாஸவின் உரோமத்துக்குக் கூடப் பொருந்தாதவர்.

தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதியின் இலக்கு 2048 இற்கு முன்னர் இலங்கையைத் தன்னிறைவான நாடாக மாற்றுவதேயாகும். எனவே, மக்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் எமது அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரன் மூலம் வளர்த்தெடுக்கத்  தீர்மானித்துள்ளோம். எமது நாடு ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும். அதுவே எமது கட்சியின் நோக்கம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments