அரசாங்க குடியிருப்புகளில் உள்ள சில அதிகாரிகள் எவ்வித அக்கறையும் கொண்டிராததால் அவை டெங்கு நுளம்பு அதிகரிக்கும் இடங்களாக மாற்றமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தெரிவித்துள்ளார்.
மாகாண டெங்கு கட்டுப்பாட்டு செயலணியினருடன் திருகோணமலை ஆளுனர் செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இவ்வாறு டெங்கு பரவல் குறித்து அக்கறையற்று இருக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், பொது இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச குடியிருப்பு தொகுதிகளை இலக்கு வைத்து டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் (16.05.2023) ஆம் திகதியை விசேட “மாகாண டெங்கு ஒழிப்பு தினமாக” பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த ஒரு நாள் சிரமதானத்தினை நடத்த வேண்டும் என ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களை அறிவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை விரைவாக அமைத்து நடைமுறைப்படுத்துமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரனுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 1289 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்தா இந்தக் கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வருடத்தில் இதுவரை 1368 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1250 டெங்கு நோயாளர்களும் அம்பாறை மாவட்டத்தில் 77 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்படத்தக்கது.