கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 3ம் திகதி தீ பரவியுள்ளது.
குறித்த பகுதியில் தீயானது தொடர்ச்சியாக பாரிய அளவில் பரவ ஆரம்பித்த நிலையில் பூநகரி பிரதேச செயலாளர், பூநகரி பிரதேச சபை செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, தீயணைப்பு பிரிவு, இராணுவம், பொதுமக்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் இணைந்து தீப்பரவலைக் கட்டுப்படுத்தியிருந்தனர்.
இருந்த போதிலும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை(14) இரவு குறித்தபகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது.
குறித்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன் தலைமையில், கிராம மக்கள், பூநகரி பிரதேச சபை, வன வள திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது குடியிருப்பு பகுதிக்குள் தீயின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வனப்பகுதிக்கும் குடியிருப்பு பகுதிக்கும் இடையிலான சிறுகாடுகள் பெக்கோ இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன. மேலும் குறித்த பகுதிக்கு அண்மையான பகுதிகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டு பாதுகாப்பான ஒரு இடையக மண்டலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை குறித்த காட்டுத்தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.