Saturday, December 28, 2024
HomeIndiaகாங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், மகன் மீது அண்ணாமலை பாய்ச்சல்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், மகன் மீது அண்ணாமலை பாய்ச்சல்.

‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தான் பயணிக்கும் தொகுதிகளில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சுட்டிக்காட்டியும், தி.மு.க., காங்கிரசை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செய்ய தவறியது பற்றியும் குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது, திருநாவுக்கரசர் மீதும் அவரது மகனும் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் மீதும் குறை கூறினார்.

அவர் கூறியதாவது:- சிறு, குறு தொழில்கள் பலன் பெற ரூ.750 கோடி நிதி உதவி. அதன்மூலம் 31 ஆயிரத்து 965 சிறு தொழில் நிறுவனங்கள். 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என பிரதமர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் பல. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினார்களா? திருச்சி எம்.பி. திருநாவுக்கரசரும், அவரது மகன் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் அவர்கள் குடும்பத்தை தவிர மக்களுக்கென்று எதுவும் செய்தார்களா? அறந்தாங்கியில் மோடியின் முகவரியாக செயல்படும் குறைந்த விலை மக்கள் மருந்தகங்கள் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 820 மருந்தகங்களில் அறந்தாங்கியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரும் ஒரு கடை நடத்தி வருகிறார்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.2 லட்சம் பேர் பலன் அடைந்து உள்ளார்கள். அவர்களில் ஷகீலாபானுவும் ஒருவர். இலவச உணவு தானிய திட்டத்தில் பயன் அடைபவர்களில் கறம்பக்குடி பாக்கியலட்சுமியும் ஒருவர். கடந்த 9 ஆண்டுகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.48 ஆயிரத்து 506 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2.2 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்வானிதி திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உதாரணத்துக்கு அஞ்சுகம். இவர்களெல்லாம் மோடியின் முகவரிகளாக இருக்கிறார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்த தி.மு.க. மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. வருகிற தேர்தலில் இது தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார். அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து திருநாவுக்கரசர் எம்.பி. கூறியதாவது:- அறந்தாங்கி தொகுதி இப்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. அது கூட தெரியாமல் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசி இருக்கிறார்.

10 நிமிடம் அறந்தாங்கி தொகுதியில் நடந்து விட்டு சொகுசு வாகனத்தில் ஏறி சென்றிருக்கிறார். அதற்குள் தொகுதி முழுவதையும் பார்த்து தெரிந்து கொண்டாரா? அந்த தொகுதிக்குள் நிறைவேற்றப்பட்டுள்ள அடிப்படை தேவைகள், ரூ.20 கோடியில் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டப்பணிகள், மாவட்ட மருத்துவமனை விரிவாக்கம் என்று எவ்வளவோ பணிகள் நடக்கின்றன. எம்.எல்.ஏ.விடம் கேட்டால் அவர் பட்டியலை தரப்போகிறார்.

ஆனால் அண்ணாமலைக்கு தெரிந்தது அவ்வளவுதான். பாவம். ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட ஜெயிக்காத அண்ணாமலை எங்களை விமர்சிக்கிறார். ஒரு பகுதிக்கு செல்லும்போது ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எதையாவது பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments