உலகம் முழுவதுமே ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா இந்த ஆராய்ச்சியில் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அங்குள்ள பாராளுமன்றத்தில் அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் இது தொடர்பாக பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் சென்னை அடுத்த முட்டுக்காடு கடல் பகுதியில் கடந்த 26-ந்தேதி மாலையில் மர்மமான முறையில் நான்கு பறக்கும் தட்டுகள் வானில் பறந்துள்ளன. தரையில் இருந்து பார்க்கும்போது வெளிச்சமாக மட்டுமே தெரிந்த இந்த பறக்கும் தட்டுகளை ஓய்வுபெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். மனைவியுடன் முட்டுக்காடு கடற்கரையில் மாலை 5.30 மணி அளவில் அமர்ந்திருந்த போதுதான் பிரதீப் பிலிப்பின் கண்ணில் நான்கு ஒளி தென்பட்டுள்ளது. உடனடியாக தனது ஐபோன் மூலமாக அவர் அதனை படம் பிடித்துள்ளார்.
பின்னர் அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தபோது அதில் பறக்கும் தட்டு போன்று நான்கு உருவம் தெரிந்துள்ளது. இதை பார்த்து வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த அவர் அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் உள்ளவை டிரோன் போலவோ சிறிய விமானம் போலவே இல்லை. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் தட்டாகவே அவை உள்ளது. பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதனை புகைப்படமாக யாரும் எடுத்தது போன்று தெரியவில்லை. அப்படி இருந்தால் இந்தியாவிலேயே முதல்முறையாக எடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்றார்.
இது தொடர்பாக பறக்கும் தட்டு ஆராய்ச்சியாளரான சபீர் உசேன் கூறியதாவது:- பறக்கும் தட்டுகள் ஆராய்ச்சிகளில் உலக நாடுகள் அனைத்துமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பறக்கும் தட்டுகளை தற்போது ஏலியன்ஸ்கள் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே முட்டுக்காட்டில் பறந்த பறக்கும் தட்டு தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் உரிய ஆய்வு செய்தால் பறக்கும் தட்டில் வந்தவர்கள் யார் என்பது தெரிய வந்துவிடும். அந்த பறக்கும் தட்டில் உண்மையிலேயே ஆட்கள் இருந்தார்களா? இல்லையா? அது நோட்டம் பார்ப்பதற்காக விடப்பட்ட பறக்கும் தட்டா? என்பதெல்லாம் நமக்கு தெரியாது.
இது தொடர்பாக உரிய ஆராய்ச்சிகளை நடத்தி இனிதான் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் சென்னையை ஒட்டிய கடல் பகுதியில் மர்மமான முறையில் வானில் பறந்த பறக்கும் தட்டுகளை படம் பிடித்திருப்பதும் அதில் வேற்றுக்கிரக வாசிகள் வந்து நோட்டமிட்டிருக்கலாம் என்று வெளியாகி இருக்கும் தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.