இலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூவர் சாவடைந்துள்ளனர்.
மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை – மெதகமை பகுதியில் காட்டு இன்று (28) பிற்பகல் காட்டு யானை தாக்கி 58 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இலக்கானார் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மெதகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலனறுவை – மெதிரிகிரிய புதிய நகரத்தில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான நபரை யானை தாக்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம், மஹவ பகுதியில் காட்டு யானை தாக்கி 43 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதிக்குள் இன்று (28) அதிகாலை நுழைந்த யானையை விரட்டுவதற்கு முற்பட்டபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.