ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்திற்குப் புறம்பாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோருக்கு மாத்திரமே அனுமதி உள்ளது.
ஆனால் கடந்த காலங்களில் தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளின் கீழ் சேர்க்கப்பட்டன.
இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர் கடந்த மாதத்திற்கான மேற்படி கொடுப்பனவுகளுக்கான ஒதுக்கீட்டை கோரி ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் குறித்த கொடுப்பனவுகள் எதனையும் ஜனாதிபதி அலுவலகம் இப்போது வழங்காது என முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தீர்ப்பின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே உள்ளது.