பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட காசோலை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
காலியில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றியீட்டியிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு பணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பெரும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக வெற்றியீட்டிய அணிக்கு வழங்கப்பட்ட அடையாள காசோலையில் எழுத்தில் 2000 டொலர்கள் என குறிப்பிடப்பட்ட போதிலும் இலக்கங்களில் 5000 டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டு நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த அச்சுப் பிழைக்கே தாம் காரணமல்ல என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த தவறுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாகவும் நிகழ்வை ஏற்பாடு செய்த itw கன்சல்டன் என்ற நிறுவனமே இந்த தவறை இழைத்துள்ளது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடைபெறுவதனை தவிர்த்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதியளித்துள்ளது.
வெற்றியீட்டிய அணிக்கு 5000 டொலர்கள் பணப்பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.