Saturday, December 28, 2024
HomeSrilankaகனேடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.

கனேடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் (17) நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் ஆரம்பத்தில், ஈழத்தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார். இதன்போது இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்தி கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையினால் நடாத்தப்பட்ட நிகழ்வையும் கனேடிய உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்திருந்தார்.

ஈழத்தமிழரகளின் அரசியல் உரித்துகளை நிலைநாட்டுதல், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றின் காலத் தேவை, 13வது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா, அமெரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஸ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்டு அதிலும் குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழும் கனேடிய நாட்டைப் பின்பற்றி இலங்கையில் சமஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள், 13வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கத்தக்கதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அரசுக்கு வழங்கப்பட்டிருந்தும் கூட, வடக்கு கிழக்கின் 80வீதமான நிலங்கள் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், கனியவளத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றால் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றமை, இன, மத, மொழி ரீதியான வலிந்த ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவைதவிர இலங்கையில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெண்களின் அரசியல் வகிபாகம் மிகக்குறைந்தளவில் காணப்படுவதன் காரணம் குறித்தும், அதன் யதார்த்தநிலைப் பின்னணிகள், குடும்ப மற்றும் சமூகச் சூழல் என்வை குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை, போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374.8ஏக்கர் காணிகள் தொடர்பான விவரமும், 2009க்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்த விவரண அறிக்கையு;ம நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments