நான்கு ஓடுதளங்களை உடைய நாட்டின் முதல் விமான நிலையம் என்ற பெருமையை, புதுடில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பெற்று உள்ளது. இது விமானம் தரையில் ஓடும் 20 நிமிட நேரத்தை பத்து நிமிடமாக குறைக்கும். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஓய்வு பெற்ற ஜெனரலும் இணை அமைச்சருமான வி.கே.சிங் உள்ளிட்டோர் நான்காவது ஓடுதளத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த பாதை வழியாக ஏர் இந்தியா 821 விமானம் பீரங்கி மூலமாக நீர் மழைத் தூவி வாழ்த்துகள் முழங்க டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த புதிய ஓடுதளம் காரணமாக விமான நிலையத்தில் தினமும் விமானங்களின் எண்ணிக்கை தற்போதைய 1500 ல் இருந்து 2 ஆயிரமாக அதிகரிக்கும். அதேபோல் கூடுதலான பயணிகளையும் கையாள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அமெரிக்காவின் அட்லாண்டாவை மிஞ்சும் வகையில் டெல்லி விமான நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அப்போது அமைச்சர் கூறியதாவது:
நாட்டில், நான்கு ஓடு தளங்கள் உடைய முதல் விமான நிலையம் என்ற பெருமையை, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது. இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு 2,000 விமானங்கள் வரை இயக்கக் கூடிய திறன் உடைய விமான நிலையமாக இது உருவெடுத்துள்ளது.
இந்த விமான நிலையம் வரும் அக்டோபர் மாதம் முதல் முழுவீச்சில் செயல்பட துவங்கும். இந்த புதிய ஓடு தளம் மற்றும் புதிய ‘டெர்மினல்’ திறக்கப்பட்டதன் வாயிலாக, ஆண்டு ஒன்றுக்கு, 10 கோடிக்கும் மேற்பட்ட பயணியர், இந்த விமான நிலையத்தை பயன்படுத்த தகுதி உடையதாக மாறி உள்ளது. இந்திய பயணியர் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் அவர் கூறினார்.