இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கும், சதர மகா தேவாலயத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, காசோலை மூலம் 1 கோடியே 32 இலட்சத்து 99ஆயிரத்து 10 ரூபாவை (1,32,99,010 ) செலுத்துமாறு உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டை மின்சார வாரிய தலைமை பொறியாளர் எச். எஸ். பண்டாரவின் கையொப்பத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே உட்பட சதர மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21 முதல் 31 வரை ஊர்வலம் வீதி உலா இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீ தலதா மாளிகை வளாகம், சதர தேவாலம், பெரஹர வீதி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்காக பொருத்தப்பட வேண்டிய மின் விளக்கு வேலைகள் மற்றும் பிற மின் வேலைகளுக்கு இந்த செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீ தலதா மாளிகை ரூ.34,12,479, நாதர் கோயில் ரூ.11,22,145, விஷ்ணு கோயில் ரூ.13,68,385, கதிர்காமம் கோயில் ரூ.11,02,705 மற்றும் பத்தினி கோயில் ரூ.11,02,705 செலுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி நகரில் ஊர்வலம் பயணிக்கும் அனைத்து வீதிகளிலும் மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்கு மின்சார சபைக்கு 44,41,273 ரூபாவும், ஜெனரேட்டருக்கு 7,49,215 ரூபாவும் செலவாகும் என வாரியம் தயாரித்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.