கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தின் விளாவோடை பாலத்தின் புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த பாலமானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகிவந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இப் பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது கிராமிய பாலங்கள் புனரமைத்தல் வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த பாலம் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்த கலந்துரையாடல் ஒன்று துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடந்த கிழமை இடம்பெற்றது. இதன்போது குறித்த திட்டம் தொடர்பான களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு, விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த செயற்றிட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை வீதி அபிவிருத்தி திணைக்களம் கிராமிய பாலங்கள் புனரமைத்தல் வேலைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கியுள்ளதுடன், திட்ட கண்காணிப்பினையும் மேற்கொள்ளவுள்ளது.