தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கனல் கண்ணன். இந்து முன்னணி நிர்வாகியாகவும் உள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை இவர் வெளியிட்டார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.