இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது . இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் இன்று தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார் .
கடந்த 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார்.