மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி பிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 3-ந்தேதி ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணி’யை மைதேயி பிரிவினருக்கு எதிராக மழை மாவட்ட மக்கள் நடத்தினர்.
அப்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து இன்னும் வன்முறை ஓயவில்லை. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மைதேயி இனத்தவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் கிராம மக்களுடன் கலந்து இருப்பதால் அவர்களை கைது செய்வதில் போலீசார், அதிரடிப்படைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் இம்பாலின் கிழக்குப் பகுதியில் உள்ள இதாம் கிராமத்தில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்கள் மறைந்து இருந்தனர்.
அப்போது, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றியதுடன் அவர்களையும் கைது செய்தனர். அந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் ராணுவத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தலைமையிலான குழுக்களும் ராணுவத்தை எதிர்த்து நின்றன. ராணுவ நடவடிக்கை எடுத்தால் கடும் உயிர்ச்சேதம் நிகழும் என்பதால், ராணுவம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றது. பின்னர், மனிதாபிமான அடிப்படையில் கிளர்ச்சியாளர்களை விடுவித்து கைப்பற்றிய ஆயுதங்களுடன் ராணுவம் வெளியேறியது.
2015-ம் ஆண்டு டோக்ரா யுனிட் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் இந்த குழுவில் இடம்பிடித்திருந்ததாக ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. மக்கள் உயிருக்கு எதிராக கடினமான முடிவு எடுக்க விரும்பவில்லை, முதிர்ச்சியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றில் இருந்து தொடர்ந்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், ராணுவம் இறுதியில் வெளியேறியது.