மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 9 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக பா.ஜ.க சார்பிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் வாழும், பணியாற்றி வரும் இந்தியர்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்வதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் கே.அண்ணாமலை 5 நாட்கள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அதன்படி, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு, அண்ணாமலை சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். இந்நிலையில், லண்டன் சென்றடைந்த அண்ணாமலை அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலைக்கு அங்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், அனைவரின் நலனுக்காக முருகனிடம் வேண்டிக் கொண்டதாகவும் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்குகிறார். இதேபோல, பிர்மிங்காமில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற வார்விக் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடுகிறார். அரசியல் உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.