பிரான்சில் 15 வயதுக் காதலியைக் கத்தியால் குத்தி பின்பு உயிருடன் எரித்த ஆடவருக்கு 18 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் மாண்ட அந்த உயர்நிலைப் பள்ளி மாணவி நீதிமன்றத்தில் ஷைனா என்ற பெயரால் மட்டும் அடையாளம் காணப்பட்டார்.
அவரின் உடலில் பல கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாகவும் எரிக்கப்படும்போது அவர் இன்னும் உயிருடன் இருந்ததாகவும் பிரேதப் பரிசோதனையில் தெரிந்தது.
சந்தேக நபர் ஷைனாவைத் திட்டமிட்டுக் கொன்றதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அவருக்கு 20 அல்லது 30 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதாடினார்.
ஆனால் சம்பவம் நடந்தபோது சந்தேக நபருக்கு வயது 17 என்பது கருத்தில்கொள்ளப்பட்டது.
கட்டுப்பாடுகளால் அவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
சந்தேக நபர் தான் குற்றம் புரியவில்லை என்று தொடர்ந்து கூறுகிறார்.
அந்தச் சம்பவம் பிரான்சில் பரவலாகப் பேசப்பட்டது.
அந்நாட்டில் 3 நாளுக்கு ஒரு முறை ஒரு பெண் தமது காதலர் அல்லது முன்னாள் காதலரால் கொல்லப்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.