Saturday, December 28, 2024
HomeIndiaதிருச்செந்தூர் அருகே ஆறுமுகனேரியில் சோழர்கள் வரலாற்றை கூறும் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு

திருச்செந்தூர் அருகே ஆறுமுகனேரியில் சோழர்கள் வரலாற்றை கூறும் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு

தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களின் வரலாற்றுத் தொடர்புடைய ஓலைச்சுவடி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவடியியல் பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆறுமுகனேரியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் த.தவசிமுத்து மாறனிடமிருந்து 14 அரிய ஓலைச் சுவடிகளைப் பெற்றார். அதில் சோழர்கள் வரலாறு தொடர்புடைய தகவல்கள் கிடைத்தன.

இந்த ஓலைச்சுவடிகுறித்து பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியது:- இது மிகவும் அரிதான ஓலைச்சுவடி. ‘ஆதி பூர்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு’ சுவடி. இதில் குறிப்பிட்டுள்ள வரலாறுகள் நிகழ்ந்த காலம் கிபி.11 முதல் 18-ம் நூற்றாண்டு வரை ஆகும்.வித்யாதர முனிவர் என்பவர் சோழர் குல வலங்கை சான்றோர் மக்களின் ஆதி மூதாதையர்.

அவரின் புதல்வர்களை காளி வளர்த்து வீரக் கலைகளைக் கற்றுக்கொடுத்து ஆளாக்குகிறாள். காளி, தான் வளர்த்து ஆளாக்கிய 7 புதல்வர்களுக்கும் நிருபதிராசன் மகள்களை மணமுடித்தாள். சோழர் குலத்தைச் சேர்ந்த இவர்கள் வலங்கைச் சான்றோர் குலமாக உருவாகின்றனர்.

வலங்கைச் சான்றோர் சோழனை எதிர்த்த சம்பரனை வெற்றி கொள்கின்றனர். வணிகச் செட்டியார்களுக்கு உதவி செய்து ‘செட்டித் தோளேறும் பெருமாள்’ என்று பட்டம் பெறுகின்றனர். சோழனுக்காக இலங்கை மன்னனையும் வென்று வீர விருதுகளும், பாராளும் சீமையில் பங்கும் பெறுகின்றனர்.

யானையை ஏவிய சோழ மன்னன்:-  காவிரி அணை உடைப்பை அடைக்க சோழன் கட்டளையிட்டபோது வலங்கைச் சான்றோர் மண் குட்டையைத் தொட மறுக்கின்றனர். கோபம் கொண்ட சோழன் 2 வலங்கையரின் தலையை யானையை ஏவி இடறச் செய்கிறான்.

தனது புத்திரர்கள் கொல்லப்பட்டதை அறிந்த காளி, சோழ நாட்டில் மழை பொழியாமல் போகச் சாபமிட்டதால் 12 ஆண்டுகள் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இப்படி இருக்கையில் வலங்கைச் சான்றோர் 5 ராசாக்களாக உலகை வெகுகாலம் செங்கோல் செலுத்தி பரம்பரையாக மனுநீதி தவறாமல் ஆண்டு வந்தனர்.

அத்திமுடிச் சோழன் என்பவன் மகன் இல்லாததால் அரச மரபை மீறி வேறொரு பெண்ணின் மகனை நாடாள வைக்க முடிவு செய்கிறான். பிற நாட்டு மன்னர்கள் சத்திரிய தர்மம்மீறி நடக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியும் சோழன் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த மன்னர்கள் அத்திமுடிச் சோழனை போரில் வென்று சோழர் குல வலங்கைச் சான்றோனை முடிசூட்டி சோழ நாட்டை அரசாளச் செய்தனர். இதுபோன்று ஏராளமான வரலாற்று தகவல்கள் ஓலைச்சுவடியில் புதைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments