இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.140 கோடிக்கு விற்பனையானது. லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது.
இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் தற்போது ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தின்போது இரண்டு ஏலத்தாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும், அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறுதியில் எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.140 கோடிக்கு வாள் ஏலம் போனது. இதுகுறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் கூறுகையில், திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் சிறப்பு வாய்ந்தது. திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. அதன் பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறன் வாளை தனித்துவமாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியுள்ளது என்றார்.
கடந்த 1799ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று நான்காவது ஆங்கிலோ- மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.