முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்குச் சொந்தமான சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சிலோன் பீவரேஜஸ் கேன்களில் கேம்பா கோலா குளிர்பானங்களை பொதி செய்யும் பொறுப்பை ஏற்கும். சிலோன் பீவரேஜஸின் இலங்கை தொழிற்சாலை ஆரம்பத்தில் டின்னில் அடைக்கப்பட்ட பானங்களை இறக்குமதி செய்யும் அதேவேளை, எதிர்காலத்தில் இந்தியாவில் பொதிசெய்யும் ஆலையை நிறுவுவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒரு பிரிவான ரிலையன்ஸ் கன்சூமர் புராடக்ட்ஸ், அதன் கேம்பா குளிர்பானங்கள் வரம்பை தயாரித்து விநியோகம் செய்வதற்காக முன்பு சென்னையை தளமாகக் கொண்ட காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ் உடன் கூட்டு சேர்ந்திருந்தது.
சமீபத்திய ஒப்பந்தங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா முழுவதும் அதன் வலையமைப்பை விரிவுபடுத்தவும், இந்திய குளிர்பான சந்தையில் தனது ஆதிக்கத்தை நிறுவவும், பெப்சி மற்றும் கோகோ கோலா போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.