மதம் மாறி திருமணம் செய்த மகளை அவரது கணவருடன் ஆணவ கொலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர்.மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், அந்த வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இருப்பினும் அவர் யார்? என்ற அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து பொலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நவிமும்பை பன்வெல் பகுதியில் புதருக்குள் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற பன்வெல் பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
2 பேரும் ஒரே மாதிரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன்-மனைவியாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், கொலையான பெண் மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த கோரா கான்(வயது50) என்பவரின் மகள் குல்னாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கோரா கானை பிடித்து பொலிஸார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குட்டு அம்பலமானது. அதாவது, அவரது மகள் குல்னாசை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கரண் ரமேஷ் சந்திரா(22) என்ற வாலிபர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. தனது மகள் வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதற்கிடையே காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில் கோரா கான் அவர்களை தொடர்பு கொண்டு நைசாக பேசியுள்ளார். மகள், மருமகனையும் மும்பை வரவழைத்து உள்ளார். பின்னர் தனது மகன் சல்மான் மற்றும் சல்மானின் நண்பர் முகமது கான் ஆகியோருடன் சேர்ந்து மகள் குல்னாசையும், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த படுகொலையை மறைப்பதற்காக அவர்கள் கரண் ரமேஷ் சந்திரா உடலை மும்பை மான்கூர்டில் உள்ள கிணற்றிலும், குல்னாஸ் உடலை நவிமும்பை பன்வெல் காட்டுப்பகுதியிலும் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பொலிஸார் கோரா கான், சல்மான், முகமது கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக 3 சிறுவர்களையும் பொலிஸார் பிடித்தனர். இவர்கள் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலையாளிகளிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.